(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 1, 2015

கடலாடி தாலுகாவில் 4,000 மெகாவாட் திறன் கொண்ட மாபெரும் அனல் மின் திட்டம் 24,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது!!

No comments :
தமிழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக ரூ.30,791 கோடி செலவில் ராமநாதபுரம், வடசென்னை, அரியலூர், கோவை ஆகிய இடங்களில் 4 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் தாக்கல் செய்த அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் 4,000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாபெரும் அனல் மின் திட்டம் 24,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்திற்குத் தேவையான சுமார் 3,000 ஏக்கர் நிலம் கொண்ட நல்லாம்பட்டி வருவாய் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தேவையான திட்ட அனுமதிகளை பெற்ற பின் இம்மின் திட்டம் தொடங்கப்படும்.


மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 400 கிலோ வோல்ட் மற்றும் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வட சென்னையில் 765/400 கிலோ வோல்ட் 2,335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். இந்த தொகுப்பு துணை மின் நிலையம் அரியலூர் 765/400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் 400 கிலோ வோல்ட் புளியந்தோப்பு, துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு வட சென்னை மற்றும் எண்ணூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்ற வழிவகை செய்யும்.

மேலும் அரியலூரில் 765/400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் 2121 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துணை மின் நிலையம் 765/400 கிலோ வோல்ட் திருவலம் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்பட்டு வட சென்னை மற்றும் எண்ணூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படவிருக்கும் மின்சாரத்தை கடத்துவதற்கு துணை புரியும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 765/400 கிலோ வோல்ட் 2*1500 எம்.வி.ஏ. திறன் கொண்ட துணை மின் நிலையம் 2,335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துணை மின் நிலையம் அரியலூர் 765/400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் 400 கிலோவோல்ட் எடையார் பாளையம், ராசிப்பாளையம் துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, கோவை, சேலம் மற்றும் மேட்டூர் பகுதிகளின் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும்.

மேற்காணும் அறிவிப்புகள் மூலம் தமிழகம் மின்சாரத்தில் மின்மிகை மாநிலம் என்ற நிலையைப் பெறுவதோடு, தொழில் வளர்ச்சி மேன்மையடைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்

செய்தி: ஒன் இண்டியா
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment